விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு 5-வது நாளாக போராடும் விவசாயிகள்


விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு 5-வது நாளாக போராடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:20 AM IST (Updated: 12 Jan 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு 5-வது நாளாக போராடி வரும் விவசாயிகள், மனித மாமிசத்தை சாப்பிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

விருத்தாசலம்,

கரும்பு நிலுவை தொகையை வழங்காத சித்தூர் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்தும், கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகை மற்றும் மாநில அரசின் ஆதரவு தொகையை உடனடியாக அரசு பெற்று தரக்கோரியும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட 8- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 7-ந்தேதி விருத்தாசலம் பாலக்கரையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பல்வேறு வடிவிலான போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக, நேற்று விவசாயிகளின் போராட்டம் 5-வது நாளாக நீடித்தது. இதற்கு தனியரசு தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசி னார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மனித எலும்பு கூடுகள், மண்டை ஓடுகளை போராட்டம் நடைபெறும் இடத்தில் வைத்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், உலகம் முழுவதும் பதவி, ஊதிய உயர்வு கேட்டு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

ஆனால் நாங்கள் 23 மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்புக்கான பணம் இன்னும் கிடைக்கவில்லை. இதை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் தான் இன்று உள்ளோம்.

கரும்புக்கான பணத்தை ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது. இதுபற்றி தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கேட்டால் அவர் எதுவும் கூற மறுக்கிறார். இதனால் தான் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை நடத்தினோம். இன்று (அதாவது நேற்று) எலும்புக்கூடுகளை வைத்து போராட்டம் நடத்தினோம்.

இதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 19-ந்தேதி மனித மாமிசம் உண்ணும் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு விவசாயிகளாகிய எங்களை தள்ள வேண்டாம்.

இந்த பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவை தொகையை பெற்று தருவதுடன், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று மதியம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் முன்னிலையில் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்க்கரை ஆலை அதிகாரிகள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பணத்தை தருவதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர். அப்படியென்றால், தங்களுக்கு காசோலையாக தர வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். அவ்வாறு தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டத்தை தொடர்வோம் என்றனர். தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி, கரும்பு ஆலை அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

விருத்தாசலத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story