விருதுநகரில் தெருவிளக்கு, அடிபம்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை


விருதுநகரில் தெருவிளக்கு, அடிபம்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:53 PM GMT (Updated: 11 Jan 2019 10:53 PM GMT)

விருதுநகரில் பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகளும், அடிபம்புகளும் பழுதடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சியில் தெருவிளக்கு மற்றும் அடிபம்பு பராமரிப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேல் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட தனியாருக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாததால் அவர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நகரில் பல பகுதிகளில் பழுதாகி உள்ள தெருவிளக்குகளும், அடிபம்புகளும், விசை பம்புகளும் நகர் மக்களுக்கு பெரும் சிரமம் தருவதாக உள்ளது.

தெருவிளக்குகள் மற்றும் அடிபம்பு பராமரிப்பு பணிக்கான தொகையை பட்டுவாடா செய்ய நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை கொடுக்காமல் வழக்கமான ஒப்பந்தப்பணிக்கான பணப்பட்டுவாடா பட்டியலில் சேர்த்துள்ளதால் பணப்பட்டுவாடா ஒருவருடத்துக்கு மேல் தாமதம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணியின் அத்தியாவசியத்தை கருதி நகராட்சி நிர்வாகம் இதற்கான தொகையை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூறப்பட்ட போதிலும் நகராட்சி நிர்வாகம் அதற்கு முன் வராததால் பராமரிப்பு பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களும் இப்பிரச்சினையில் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் 10 நாட்கள் இடைவெளியில் நடைபெற்று வரும் நிலையில் நகர் மக்கள் தங்கள் தேவைக்கு அடிபம்புகளையும், விசை பம்புகளையும் நம்பி உள்ளனர். தெரு விளக்குகள் செயல்படாத நிலையில் குற்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் தெருவிளக்குகள் மற்றும் அடிபம்புகள் பழுதடைந்தால் அதுபற்றி புகார் தெரிவிக்க தற்போது ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் பழுதடைந்து இருந்தால் புகார் தெரிவித்து பரிகாரம் தேடலாம். ஆனால் நகர் முழுவதும் பல இடங்களில் இப்பிரச்சினை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விருதுநகரில் தெரு விளக்கு மற்றும் அடிபம்பு பராமரிப்பு பணிகள் முடக்கம் அடையாமல் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story