மும்பையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராத அரசு, மாநகராட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு


மும்பையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராத அரசு, மாநகராட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 10:54 PM GMT (Updated: 11 Jan 2019 10:54 PM GMT)

மும்பையில் பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராத அரசு, மாநகராட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மும்பை,

மும்பையில் பெஸ்ட் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தால் மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாநகராட்சி மற்றும் மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் இது குறித்த தங்கள் ஆதங்கத்தை சமூக வலை தளங்களில் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு

இந்தநிலையில் பெஸ்ட் போக்குவரத்து கழகத்தின் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி எந்த முயற்சியையும் செய்யவில்லை என சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், சுகாதாரம், குடிநீர் மற்றும் கல்வியை போல போக்குவரத்து சேவையையும் லாப நோக்கத்தில் இல்லாமல் அரசு செயல்படுத்த வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

குர்லாவில் இருந்து மாகுலுக்கு பெஸ்ட் பஸ்சில் தினசரி பணிக்கு செல்லும் ராஜாராம் சாத்புத்தே என்ற பயணி கூறுகையில், ‘‘நான் கடந்த 40 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறேன். ஆனால் பெஸ்ட் ஊழியர்கள் இத்தனை நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததை இதுவரை நான் பார்த்தது இல்லை.

மக்கள் பரிதவித்து கொண்டு இருக்கும் நேரத்தில் மும்பையில் இருக்க வேண்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரபிரதேசத்தில் இருக்கிறார். நான் அவரிடம் உத்தரபிரதேசத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்க விரும்புகிறேன்’’ என்றார்.

ஆலோசனை

இதற்கிடையே, பெஸ்ட் ஊழியர் யூனியன் தலைவர் சசாங்க் ராவ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்களுடன் பரேலில் உள்ள சிரோத்கர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரை ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வார்கள், என்றார்.

Next Story