பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா


பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 11 Jan 2019 11:25 PM GMT (Updated: 11 Jan 2019 11:25 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று (சனிக் கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பெரும்பாலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்கள் அலங் கரிக்கப்பட்டு திருவிழா நடைபெறுவது போல் காணப்பட்டது. மேலும் கரும்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் பொங்கலை பகிர்ந்து உண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் உள்ள செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில் சமத்துவ பொங்கலை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடினர். தமிழரின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சட்டையில் மாணவர்களும், சேலையில் மாணவிகளும் தனியார் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடப் பட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் மாணவ- மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறி கொண்டதோடு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் தங்கி யிருந்து படிக்கும் மாணவ- மாணவிகள் விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக புறப்பட்டு சென்றனர். நேற்று ஒரு சில தனியார் கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Next Story