தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுகிறது தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தகவல்
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ் அகமது தெரிவித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இட நெருக்கடியை குறைக்கும் வகையில், மருத்துவமனை வளாகம் அருகில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மருத்துவமனையின் கூடுதல் கட்டுமானப்பணிகளை தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ் அகமது நேற்று ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா உடனிருந்தார். இதையடுத்து தரேஸ் அகமது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் விரிவாக்கப்பிரிவில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அவசர சிகிச்சைப்பிரிவு, மருந்தகம், எம்.ஆர்.ஸ்கேன், சி.டி.ஸ்கேன், பெண்களுக்கான மார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் மோமோ கிராபி உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட உள்ளது. மேலும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பணிகள் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதே இடத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. பாடாலூரில் அரசு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை துரித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை, ஆய்வகம் ஆகிய நவீன வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தாய் திட்டத்தில் 77 விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய நபர்கள் 40-ல் இருந்து 60 நிமிட இடைவெளியில் சிகிச்சை பெற வசதியாக, கூடுதல் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவையை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் வழங்கும் சேவைக் குறைபாடு மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சூப்பர் 30 என்கிற திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது மருத்துவமனையின் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) திருமால், இருக்கை மருத்துவர் ராஜா, உதவி செயற்பொறியாளர் கீதா, சூப்பர் 30 ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story