மாவட்ட செய்திகள்

மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் + "||" + Opposition to attack on employee near Marthandam: Employees locked in ration shops without giving pongal gifts - The civilian struggle for capturing the bass

மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டி சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே பொங்கல் பரிசு வினியோகம் முறையாக நடைபெறாததால் தமிழகம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது. நேற்றும் பல இடங்களில் ரேஷன் கடை முன் தர்ணா, மறியல் போன்ற போராட்டங்கள் நடந்தன.

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியில் பாகோடு கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் கடந்த 7-ந் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.

நேற்று காலையில் பொங்கல் பொருட்கள் வாங்க ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் திரண்டு இருந்தனர். டோக்கன் வழங்கப்பட்ட போது, ரேஷன் கடை ஊழியர் செல்வனுக்கும் (வயது 45), மருதங்கோடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு நின்ற சுரேந்திரனின் அண்ணன் ரவீந்திரன்(57), அதே பகுதியை சேர்ந்த பைஜூ(40) ஆகியோர் சேர்ந்து செல்வனை தட்டிக்கேட்டனர். இதனால், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த செல்வன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சுரேந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் கடை ஊழியர் செல்வன் தாக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. அதைதொடர்ந்து செல்வன் தாக்கப்பட்டதை கண்டித்து பாகோடு கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 6 ரேஷன் கடைகளை ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் கடையை பூட்டி சென்றனர். இதனால் பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரேஷன் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றதால், செம்மங்காலையில் அதிகாலை முதல் பொங்கல் பொருட்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் அவர்கள், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே, மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர்கள் விரைந்து வந்து, பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டில் விவசாய விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் கீழ் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது.

இங்கு கிறிஸ்துநகர், மிஷன் கம்பவுண்ட், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க நேற்று அதிகாலை 5 மணிக்கே பொதுமக்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஆண்களை விட பெண்களின் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஆனால், மதியம் வரை கடை திறக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து பகல் 12.15 மணிக்கு திறக்கப்பட்டு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த குளத்தூரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது சிலர் வரிசையில் நிற்காமல் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் பொங்கல் பொருள் பெற வந்திருந்த 2 மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த மூதாட்டிகள் பொங்கல் பொருட்களை பெற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதேபோல் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் பெற வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

கொல்லங்கோடு அருகே மேக்காடு என்னுமிடத்தில் மெதுகும்மல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஊழியராக ரெஜிலா(வயது 29) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் கடை ஊழியர் ரெஜிலா, வரிசையில் நின்றவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000-ம் ரொக்கம் வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பரிசு பொருள் வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி, பாபு, சுதாகரன் உள்பட 6 பேர் சேர்ந்து பணம் வழங்க காலதாமதம் ஏன் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த ரவி உள்பட 6 பேரும் சேர்ந்து அங்கிருந்த மேஜையை உடைத்து ரெஜிலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து ரெஜிலா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.