பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் - கலெக்டர் பேட்டி
திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ராஜாமணி கூறினார். திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி,
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடைபெற்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஜனவரி மாதத்தில் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றன. திருவெறும்பூர் வட்டம் சூரியூரில் 16-ந் தேதியும், மருங்காபுரி வட்டம், ஆவாரங்காட்டில் 17-ந் தேதியும், மணப்பாறை வட்டம், பொத்தமேட்டுபட்டியில் 18-ந்தேதியும், 20-ந் தேதி அணைக்கரைப்பட்டியிலும், 27-ந்தேதி கருங்குளத்திலும் என மொத்தம் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன.
6 இடங்கள் உறுதி செய்யப்பட்டு ஒரு இடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் வருவாய் கோட்டாட்சியரின் கீழ் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பிப்ரவரி மாதத்தில் 6 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இதுவரை மனுக்கள் வரப்பெற்றுள்ளன. வரப்பெற்ற மனுக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்ற பின்னர் அரசின் அனுமதி பெற்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story