மாவட்ட செய்திகள்

புயலால் உற்பத்தி குறைந்தது நெட்டி மாலை தொழிலை பாதுகாக்க அரசு முன் வருமா? தொழிலாளர்கள் கோரிக்கை + "||" + Protect the plant Nettimalai Will the government come forward? Workers demand

புயலால் உற்பத்தி குறைந்தது நெட்டி மாலை தொழிலை பாதுகாக்க அரசு முன் வருமா? தொழிலாளர்கள் கோரிக்கை

புயலால் உற்பத்தி குறைந்தது நெட்டி மாலை தொழிலை பாதுகாக்க அரசு முன் வருமா? தொழிலாளர்கள் கோரிக்கை
புயலினால் நெட்டி மாலை உற்பத்தி குறைந்துள்ளது. ஆதலால் இந்த தொழிலை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்

எத்தனை பண்டிகை வந்தாலும் தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு என்றுமே தனி சிறப்பிடம் உண்டு. பொங்கல் பண்டிகை என்றதும் நமது நினைவில் வருவது உழவுக்கு உறுதுணையான கால்நடைகள் தான். உழவன் வீட்டில் மாட்டு பொங்கல் என்றால் தனி உற்சாகம் தான். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி நெட்டி உள்பட மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.


ஆனால் காலப்போக்கில் உழவுக்கு மாடுகள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அதற்கு காரணம் எந்திரமயமானது தான். இதனால் பல வீடுகளில் மாட்டு கொட்டகைகள் காணாமல் போய் டிராக்டர் கூடமாக மாறி போனது. இன்னும் கால்நடைகளை மறவாமல் இருப்பதற்கு காரணமாக பால் என்ற ஒன்றுக்கு மட்டும் தான் என்ற நிலை இருந்து வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மாடுகளின் உதவியுடன் விவசாயத்தை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாட்டு பொங்கலில் முக்கிய இடத்தை நெட்டி மாலைகள் இடம்பிடித்து வந்தன. வண்ண, வண்ண நெட்டி மாலைகளை தயாரிப்பதற்கு திருவாரூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் பரம்பரையாக நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெட்டி மாலைகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
நெட்டி மாலை தயாரிப்பதை நாங்கள் பரம்பரை தொழிலாக செய்து வருகிறோம். இதற்கான பணிகளை ஐப்பசி மாதம் தொடங்கி விடுவோம். நெட்டி என்ற தாவரத்தின் தண்டுகளை அறுத்து வந்து அதனை பக்குவமாக காய வைப்போம்.

பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி பல வண்ண சாயத்தில் நனைத்து கலர், கலரான நெட்டிகள் உருவாக்கி வருகிறோம். இதற்கான பணிகளை 3 மாதத்தில் முடித்து விடுவோம். இந்த ஆண்டு கஜா புயல் காரணமாக பதப்படுத்திய நெட்டிகள் மழை, புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தது.

மேலும் புயல் காற்றினால் நெட்டி தாவரங்களும் சேதமடைந்தது. இதனால் உள்ளூர் பகுதியில் பற்றாக்குறை காரணமாக விருத்தாசலம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு சென்று நெட்டிகளை வாங்கி வருவதால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஆயிரம் மாலை வீதம் சுமார் 4 லட்சம் நெட்டி மாலைகளை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு புயல், மழையினால் 50 ஆயிரம் மாலைகள் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதில் காசுமாலை, ரெட்டமாலை, ஒத்தமாலை என பல வகைகள் உண்டு. இந்த மாலைகள் 8 ரூபாயில் இருந்து விற்பனை செய்கிறோம். ஆனால் தற்போது தயாரிப்பு செலவு கூடியுள்ளதால் லாபத்தை இழந்து உள்ளோம். உற்பத்தி குறைவாலும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளோம். விவசாய பணிகளும் குறைந்து வருகிறது. இதனால் நெட்டி மாலை தயாரிப்பை மட்டுமே நம்பி வாழும் எங்களுக்கு அரசு கடன் உதவிகள் வழங்கிட வேண்டும்.

நெட்டி மாலை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்திட வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். நெட்டி மாலை உற்பத்திக்கு உரிய இடவசதி இல்லாமல் கூரை வீட்டிலே வசதி இன்றி சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டிடம் கட்டி கொடுத்தால் நாங்கள் பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். புயலால் உற்பத்தி குறைந்த, நெட்டி மாலை தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண, வண்ண நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் விடியல் பிறக்க அரசு உதவ வேண்டும. இவ்வாறு அவர்கள் கூறினர்.