19 வழித்தடங்களில் புதிய அரசு பஸ்கள் இயக்கம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சரோஜா தொடங்கி வைத்தனர்
19 வழித்தடங்களில் புதிய அரசு பஸ்களை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 19 வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி பஸ்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொதுமேலாளர் லாரன்ஸ் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்கள் நாகராஜன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் புதிய பஸ்களை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் பயன்படுத்தும் வகையில் 19 வழித்தடங்களில் புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன்படி பொம்மிடி– சென்னை, தர்மபுரி–சென்னை, அரூர்–சென்னை, ஒகேனக்கல்–சென்னை, வேலூர்–பெங்களூரு, தர்மபுரி–பெங்களூரு, சேலம்–பெங்களூரு, திருவண்ணாமலை–பெங்களூரு, திருப்பத்தூர்–பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். இந்த வசதியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், மோகன்குமார், அரூர் கிளை மேலாளர் நித்தியானந்தம், அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகி பரமசிவம், தாசில்தார் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவபிரகாசம், பெரியண்ணன், வேலுமணி, ஜோதி பழனிசாமி, அங்குராஜ், ஆறுமுகம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.