தக்கோலம் அருகே ரூ.20 லட்சம் போதை பாக்கு பறிமுதல் காரில் கடத்தி வந்த 2 பேர் கைது
தக்கோலம் அருகே ரூ.20 லட்சம் போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைபாண்டியனுக்கு தக்கோலம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு (பான் பராக்) கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் தக்கோலம் போலீசார் நேற்று இரவு தக்கோலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கோலம் அருகே ஒரு குடோன் பகுதியில் ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தது. போலீசார் அங்கு சென்று காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 2½ டன் போதை பாக்கு இருந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தக்கோலத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 27), ராமச்சந்திரன் (45) என்பதும், அவர்கள் பெங்களூருவில் இருந்து காரில் போதை பாக்கு கடத்தி வந்தது தக்கோலம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் போதை பாக்கு மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.