செய்யாறு, வந்தவாசியில் இருந்து புதிய பஸ்கள் போக்குவரத்து அமைச்சர் தொடங்கி வைத்தார்
செய்யாறு, வந்தவாசியில் புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செய்யாறு,
செய்யாறு பணிமனைக்கு தமிழக அரசால் 2 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து செய்யாறிலிருந்து சேலத்திற்கு புதிய பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பின் அங்கு கூடியிருந்த செய்யாறு டவுன் சமாதியான் குளத்தெருவினை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்தனர். அதில் ‘‘நாங்கள் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் அவர்கள் பரிந்துரை செய்தனர்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் அன்னம்மாள், நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, அ.தி.மு.க நிர்வாகிகள் டி.பி.துரை, ஏ.ஜனார்த்தனம், எம்.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை – சென்னை, காஞ்சீபுரம் – சேலம் ஆகிய வழித்தடங்களில் 2 புதிய பஸ்கள் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு தூசி.கே.மோகன் எம்.எல்.ஏ., வந்தவாசி நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, தாசில்தார் அரிக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.கே.பி.மணி, முன்னாள் தொகுதி செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் எஸ்.தர்மதுரை மற்றும் நகர செயலாளர் எம்.பாஷா, ஒன்றிய செயலாளர்கள், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.