திம்பம் மலைப்பாதையில் இரவில் செல்ல தடை பண்ணாரி-ஆசனூரில் அணிவகுத்து நிற்கும் லாரிகள் போக்குவரத்து பாதிப்பதாக பயணிகள் புகார்


திம்பம் மலைப்பாதையில் இரவில் செல்ல தடை பண்ணாரி-ஆசனூரில் அணிவகுத்து நிற்கும் லாரிகள் போக்குவரத்து பாதிப்பதாக பயணிகள் புகார்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 3:40 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் இரவில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரியிலும், ஆசனூரிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பதாக பயணிகள் புகார் கூறியுள்ளார்கள்.

சத்தியமங்கலம், 

பண்ணாரியை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய பாதையாகும். 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இந்த மலைப்பாதையில் இரு மாநில பஸ், லாரி, வேன், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்,.

இந்த நிலையில் அதிக பாரம் மற்றும் உயரத்துடன் வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றன. இதனால் நாள்தோறும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பொதுமக்கள் விடுத்த புகாரை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திம்பம் மலைப்பாதைக்கு சென்று ஆய்வு செய்தார்கள்.

அதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் அதாவது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் லாரிகள் செல்லவும், எந்த நேரத்திலும் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதனால் கர்நாடகாவில் இருந்து வரும் லாரிகள் ஆசனூர் சோதனை சாவடியிலும், தமிழ்நாட்டு லாரிகள் பண்ணாரி சோதனை சாவடியிலும் இரவு நேரங்களில் தடுத்து நிறுத்தப்படுகிறன.

காலை 6 மணி வரை ரோட்டின் இருபுறமும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இவ்வாறு நிறுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஆசனூர், பண்ணாரியில் இதுபோல் ரோட்டில் நிறுத்தப்படும் லாரிகளால் மற்ற பஸ், கார், வேன், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கடந்த ஒரு வாரமாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. இதேபோல் பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளால் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் சிரமப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி நேற்று பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பஸ்சில் வந்த பக்தர் ஒருவர் கூறும்போது, ‘பண்ணாரியில் சாலையின் இருபக்கமும் லாரிகள் நிறுத்தப்படுவதால் நடுவில் குறுகிய ரோட்டில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டு நின்று நின்று செல்லவேண்டி உள்ளது.

பண்ணாரி கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே பஸ்கள் ஆமை வேகத்தில் நகர்கிறது. அதனால் நான் பஸ்சை விட்டு கீழே இறங்கி நடந்தே கோவிலுக்கு சென்றேன். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்கள் வேறு வழியில்லாமல் பஸ்சுக்குள்ளேயே நீண்ட நேரம் தவித்து கோவிலுக்கு வருகிறார்கள்.

அதனால் போக்குவரத்து போலீசார் பண்ணாரியில் போக்குவரத்து பாதிக்காத அளவுக்கு ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்‘ என்றார்.

Next Story