திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கட்டணம் வசூலிக்க தவறினால் உண்ணாவிரதம் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு


திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கட்டணம் வசூலிக்க தவறினால் உண்ணாவிரதம் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 5:01 PM GMT)

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி கட்டணம் வசூலிக்க தவறினால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் காய்கறி கமிஷன் வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் மரியராஜ், தலைவர் ஆறுமுகம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் சில்லறை கடைகள், மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 355 காய்கறி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு மார்க்கெட்டுக்கு தலைச்சுமையாக கொண்டு வரப்படும் காய்கறி, கீரை, இலைக்கட்டு மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

அதேபோல் டிராக்டர், லாரிகளில் வரும் காய்கறி மூட்டைகளுக்கு மொத்தமாக ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு வரப்படும் காய்கறி மூட்டைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.5 கட்டணமாக வசூலிக்கிறார்கள். எந்த மார்க்கெட்டிலும் இவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் ஒவ்வொரு காய்கறி மூட்டைக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் நகலை கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு, விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவர விரும்பாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஐகோர்ட்டு உத்தரவின்படி காய்கறி மூட்டைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story