புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு
புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது. திருக்கோவிலூர் தொகுதி தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் முகையூர் ஊராட்சி ஒன்றியமும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன. இந்த 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள், விழுப்புரம் மாவட்ட தலைமையிடத்திற்கு வந்து செல்ல ஏதுவான நிலையில் அமைந்துள்ளது.
மேலும் மேற்கண்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தின் தலைமையிடம் சுமார் 10 முதல் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு காலவிரயம் இன்றி பொதுமக்கள் சென்று வரக்கூடிய அளவிலும் தலைமையிடம் அமைந்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திலேயே நிலைநிறுத்தி மாவட்ட பிரிவினை ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், ஒன்றிய செயலாளர் கல்பட்டுராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story