பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை-கரும்பு விற்பனை மும்முரம்


பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை-கரும்பு விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 5:38 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள், கரும்பு கட்டுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்,

உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்று பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு, துறையூர் ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் சுற்றி மண் பானைகளின் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. பொங்கல் சீர்வரிசை கொடுக்க, வீட்டிற்கு பொங்கலிடுவதற்கு உள்ளிட்டவற்றுக்காக அளவிற்கேற்றாற்போல் மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல் கின்றனர்.

10 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு ரூ.300, ரூ.400, ரூ.600-க்கும் விற்பனையானது. மஞ்சள் குலைகள் ஒரு ஜோடி ரூ.40-க்கு விற்பனையானது. 20 பழங்கள் அடங்கிய வாழை சீப் ரூ.100-க்கும் விற்பனை நடைபெற்றது. மண்பானைகள் ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. ஒத்த அடுப்பு ரூ.150-க்கும், இரட்டை அடுப்பு ரூ.250-க்கும் விற்பனையானது. மண்ணாலான மூடிகள் ரூ.50-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் இதன் விலை அதிகரிக்கலாம், கரும்பு கட்டின் விலையும் ரூ.ஆயிரத்தை தொடலாம் என்று வியாபாரிகள் தெரி வித்தனர்.

Next Story