கல்வராயன்மலை பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் விற்பனை போலீசார் தீவிர விசாரணை


கல்வராயன்மலை பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் விற்பனை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 5:42 PM GMT)

கல்வராயன்மலை பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை பகுதியில் உள்ள பாப்பாத்திமூலை கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 30-க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மலைவாழ் மக்கள் பலர், குறைந்த விலைக்கு ஆர்டர் கொடுத்து கள்ளத்துப்பாக்கி களை வாங்கி வனப்பகுதிக்கு சென்று முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவையினங்களை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு, மலைவாழ் மக்கள் பதுக்கி வைத்திருக்கும் கள்ளத்துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து போலீசிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கிகளை ஒப்படைத்தால் தங்களை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி மலைவாழ் மக்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை வனப்பகுதியில் ஆங்காங்கே வீசிவிட்டு சென்றனர். அந்த வகையில் வெள்ளிமலை, புத்திராம்பட்டு, கரியாலூர், கொண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்களில் இருந்து 170 துப்பாக்கிகளை கண்டெடுத்து போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில் கல்வராயன்மலை மலை கிராமங்களான புத்திராம்பட்டு, புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு நாட்டு துப்பாக்கிகள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வடபொன்பரப்பி போலீசார், புத்திராம்பட்டு, புதுப்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்வராயன்மலை மலை கிராமங்களில் யாரேனும் மீண்டும் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்களா? என்றும், அவர்கள் எந்தெந்த பகுதியில் யார், யாரிடம் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர புத்திராம்பட்டு, புதுப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மலைவாழ் மக்கள் யார், யார் துப்பாக்கிகளை வைத்துள்ளனர் என்றும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story