கன்னட அமைப்புகள் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட 27-ந்தேதி பூமிபூஜை நடத்துவோம் வாட்டாள் நாகராஜ் பேட்டி


கன்னட அமைப்புகள் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட 27-ந்தேதி பூமிபூஜை நடத்துவோம் வாட்டாள் நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 5:46 PM GMT)

கன்னட அமைப்புகள் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட வருகிற 27-ந் தேதி பூமிபூஜை நடத்துவோம் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார்.

ஓசூர்,

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழக அரசை கண்டித்தும், இந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தியும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவரும், கன்னட சலுவளி கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி எல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி அத்திப்பள்ளியில் இருந்து கோ‌ஷங்களை முழங்கியவாறு வாட்டாள் நாகராஜ் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் திறந்த வேனில் அத்திப்பள்ளி எல்லைக்கு வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, திடீரென ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, வேனில் அழைத்து சென்றனர். முன்னதாக, வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

அரசியல் செய்கிறீர்கள்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாய் மூடி மவுனமான இருப்பது நல்லது. மேகதாதுவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குண்டூசி அளவிற்கு கூட சம்பந்தமில்லை. மேகதாது விவகாரத்தில், நீங்கள் அரசியல் செய்கிறீர்கள், உங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு எக்காரணத்தை கொண்டும் நாங்கள் வளைந்து போக மாட்டோம்.

எனவே, மேகதாது விவகாரத்தில் அடக்கமாக இருங்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறோம். இல்லையெனில், கர்நாடக எல்லையில் தமிழகத்தை சேர்ந்த யாரும் நுழையாத வண்ணம் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நுழையாதவாறும் முழுமையாக தடை விதிப்போம். கர்நாடக திரையரங்குகளில், தமிழ் படங்களை திரையிடவும் அனுமதிக்க மாட்டோம்.

பூமிபூஜை நடத்துவோம்

எந்த வகையிலும் மேகதாதுவிற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக அரசும் அமைதியாக இருந்து வருவது சரியல்ல. உடனடியாக மேகதாதுவிலல் அணை கட்டுவதற்கான பூமி பூஜைக்கு, கர்நாடக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், வருகிற 27-ந் தேதி, நாங்களே முன்னின்று கன்னட அமைப்புகளின் சார்பில், எனது தலைமையிலும், சா.ரா.கோவிந்து முன்னிலையிலும் பூமி பூஜையை நடத்துவோம்.

அன்றைய தினம், அனைத்து கன்னட அமைப்புகளும் மேகதாதுவில் திரள்வோம். எந்த காரணத்தை முன்னிட்டும், மேகதாதுவில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட, தமிழகத்திற்கு கிடைக்காது. ஆன போதிலும், அங்கு மின் உற்பத்தி தொடங்கியதும், அணை நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும். மேகதாதுவில் இருந்து கோலார், சிக்கபள்ளாபூர், பெங்களூரு பகுதிகளுக்கு குடிநீர் தேவைப்படுகிறது. எனவே, கன்னட-தமிழ் மக்களிடையே தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கக் கூடாது. அவ்வாறு பிரச்சினை ஏற்படுத்தினால், நாங்கள் முழுவீச்சில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் குவிப்பு

ஆர்ப்பாட்டத்தில், டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற மாநில தலைவர் சா.ரா.கோவிந்து, கன்னட ஜாக்ருதி வேதிகே மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா மற்றும் கன்னட ரக்‌ஷன வேதிகே, கன்னட சேனே உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, பெங்களூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில், அத்திப்பள்ளி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அதேபோல், தமிழக எல்லையான ஜூஜூவாடி அருகே, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கன்னட அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story