பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு ஒரு கிலோ இஞ்சி ரூ.100-க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ100-க்கு விற்பனையானது.
கடலூர்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பண்டிகை நெருங்கி விட்டதால் கடலூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதன்படி, கடலூரில் கடந்த வாரம் கிலோ ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் கிலோ ரூ.48-க்கும், கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் கிலோ ரூ.30-க்கும், கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது இரு மடங்கிற்கு மேலாக விலை உயர்ந்துள்ளது. ஆனால் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தவிர மற்ற காய்கறிகளின் விலை ரூ.10 முதல் 15 வரைக்கும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வரத்து குறைவாக உள்ள காய்கறிகள் விலை அதிகரித்தும், வரத்து அதிகமாக உள்ள காய்கறிகள் விலை குறைந்தும் காணப்படுகிறது. காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story