தண்டவாளத்தில்மரம் முறிந்து கிடந்ததால் சட்டைகளை கழற்றி காட்டி ரெயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த வாலிபர்கள்


தண்டவாளத்தில்மரம் முறிந்து கிடந்ததால் சட்டைகளை கழற்றி காட்டி ரெயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 13 Jan 2019 5:15 AM IST (Updated: 12 Jan 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

கானாப்பூர் அருகே தண்டவாளத்தில் மரம் முறிந்து கிடந்ததால், 2 வாலிபர்கள் சட்டைகளை கழற்றி காட்டி ரெயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் கோலாப்பூர்-ஐதராபாத் பயணிகள் ரெயில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

கானாப்பூர் அருகே ஒரு பாலத்தின் கீழ் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து கிடந்தது. இதை அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ரியாஸ், தவுபிக் ஆகியோர் பார்த்தனர். மேலும் அந்த வழியாக ரெயில் வந்து கொண்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர்.

ரெயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்த வாலிபர்கள்

இதையடுத்து அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தில் இறங்கி தங்களது சட்டைகளை கழற்றி காட்டி ரெயிலை நிறுத்தும்படி கூறி கொண்டே ஓடினர். இதை பார்த்த ரெயில் டிரைவர், ஆபத்து இருப்பதை உணர்ந்து உடனே ரெயிலை நிறுத்தினார்.

அதன்பின்னர் ரெயில் டிரைவரிடம், ரியாஸ், தவுபிக் ஆகியோர் ரெயில்வே தண்டவாளத்தில் மரம் முறிந்து கிடப்பது பற்றி தெரிவித்தனர். தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்து கிடப்பதை அறிந்து 2 பேரும் தங்களது சட்டைகளை கழற்றி காட்டி உரிய நேரத்தில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 1,200 பேர் உயிர் தப்பினர்.

விருதுக்கு பரிந்துரை

அதையடுத்து கானாப்பூர் ரெயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு உப்பள்ளிக்கு சென்றது.

முன்னதாக விபத்தில் இருந்து காப்பாற்றிய வாலிபர்களை பயணிகள் பாராட்டினர். அத்துடன் ரெயில் விபத்தை தவிர்த்த வாலிபர்களுக்கு தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ரெயில் விபத்தை தவிர்த்து பயணிகள் உயிரை காப்பாற்றிய அவர்களுக்கு விருது வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story