சிதம்பரத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு


சிதம்பரத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 13 Jan 2019 4:00 AM IST (Updated: 12 Jan 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்ணார்குடி தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவரது மகள் நந்தினி(23). இவரும், சிதம்பரம் ஓமகுளத்தை சேர்ந்த கலைவாணன் மகன் மணிகண்டன் என்பவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சிறிது நாட்களிலேயே மணிகண்டன் நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.

இதுபற்றி நந்தினி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து சண்முகம் 6 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை வரதட்சணையாக மணிகண்டனிடம் கொடுத்தார்.

அதன் பிறகும் மணிகண்டன் நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சண்முகம், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நந்தினிக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால், அவரது தற்கொலை குறித்து சப்-கலெக்டர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story