தட்டார்மடம் அருகே குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலியானது எப்படி? பரபரப்பு தகவல்கள்


தட்டார்மடம் அருகே குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலியானது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:30 AM IST (Updated: 12 Jan 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலியானது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தட்டார்மடம், 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து எள்ளுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமன் (வயது 45). சமையல் தொழிலாளியான இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி சரசுவதி (40). இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன், சென்னையில் வேலை செய்து வருகிறார். மற்ற 2 மகன்களும் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களுடன் அரிராமனின் தாயார் பிச்சை ராஜகனியும் (80) வசித்து வருகிறார். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

அரிராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அரிராமன் மது குடித்து விட்டு, தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர் தனது வீட்டில் உள்ள டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

இதனால் சரசுவதி தன்னுடைய குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அரிராமன் தனது வீட்டில் படுத்து தூங்கினார். அந்த வீட்டின் மற்றொரு அறையில் பிச்சை ராஜகனி தூங்கினார்.

அப்போது நள்ளிரவில் அரிராமன் தூங்கிய அறையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து குடிசை முழுவதும் தீப்பற்றியது. ஆனால் அரிராமன் மது போதையில் அயர்ந்து தூங்கியதால், அவரால் உடனே வெளியே வர முடியவில்லை. குடிசையில் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த பிச்சை ராஜகனி உடனே வெளியே வந்தார். அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்ததில் காயம் அடைந்தார்.

பின்னர் சிறிதுநேரத்தில் குடிசையில் இருந்த சிலிண்டரில் தீப்பிடித்ததில் வெடித்து சிதறியது. இதனால் குடிசை வீடு தரைமட்டமானது. தீயில் சிக்கிய அரிராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தீயில் எரிந்த குடிசையில் தண்ணீரை ஊற்றி அணைக்க போராடினர்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசாருக்கும், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் படுகாயம் அடைந்த பிச்சை ராஜகனியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்தில் உடல் கருகி இறந்த அரிராமனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிலிண்டர் வெடித்ததில் குடிசையின் அருகில் இருந்த தலா ஒரு ஆடு, மாடு, நாய், கோழி ஆகியவையும் தீயில் கருகி இறந்தன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரிராமன் மின்சாதன பொருட்களை உடைத்ததால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்ததா? அல்லது அரிராமன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரசுவதி தன்னுடைய 2 மகன்களுடன் தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றதால், அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இறந்த அரிராமனின் உடலைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story