நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 6:50 PM GMT)

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை, 

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த கொடி மரத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் 4-ம் நாள் திருவிழாவான வருகிற நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தியுடன் வீதி உலா நடக்கிறது.

வருகிற 21-ந் தேதி பகல் 12 மணி அளவில் தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் சுவாமிகளுக்கு விஷேச தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள். 22-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது. பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி தெப்பத்தை சுற்றி வலம் வருகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story