பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி


பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:45 PM GMT (Updated: 12 Jan 2019 7:25 PM GMT)

பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ஏ.ஆர்.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் வசித்து வருபவர் ராமநாதம் ஜோசுயுலா. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகன் வம்சிகிருஷ்ணா ஜோசுயுலா(வயது 18). இவர், வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வம்சிகிருஷ்ணாவின் தாயார், வீட்டின் பால்கனியில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருமாறு கூறினார். எனவே வம்சி கிருஷ்ணா, காலில் ‘ஷூ’ அணிந்தவாறு பால்கனியில் உள்ள கைப்பிடி கம்பியின் மீது ஏறி நின்று உயரத்தில் இருந்த துணியை எடுக்க முயன்றார்.

மாடியில் இருந்து விழுந்து பலி

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் தலை, கை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த வம்சிகிருஷ்ணாவை அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வம்சிகிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார் பலியான வம்சிகிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story