கோவை அருகே வாலிபரை கடத்தி கொன்று பிணம் தடுப்பணையில் வீச்சு; 2 நண்பர்கள் கைது


கோவை அருகே வாலிபரை கடத்தி கொன்று பிணம் தடுப்பணையில் வீச்சு; 2 நண்பர்கள் கைது
x
தினத்தந்தி 13 Jan 2019 12:00 AM GMT (Updated: 12 Jan 2019 8:39 PM GMT)

கோவை அருகே வாலிபரை கடத்தி கொலை செய்து பிணத்தை தடுப்பணையில் வீசிய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்

துடியலூர்,

கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி கார்டன் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் ராஜா என்ற திண்டு (வயது 29). இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 3–ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராஜா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவருடைய தாய் சுமா கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் ராஜாவை சில நபர்கள் பூக்கடையில் இருந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளக்கிணர் மாகாளியம்மன் நகரை சேர்ந்த காளி என்ற காளிதாஸ் (32), வால்பாறையை சேர்ந்த தர்மன் என்ற தர்மேந்திரன் (30) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள், 2 பேரும் ராஜாவின் நண்பர்கள் என்பதும், முன்விரோதம் காரணமாக அவரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் பிணத்தை சாக்கு பையில் போட்டு மூட்டையாக கட்டி, கணுவாய் தடுப்பணையில் வீசி சென்று உள்ளனர். மேலும் இந்த கொலையில் விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காளிதாஸ், தர்மேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதில் விஜயகுமார், நல்லேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் கோவை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் என்பதும், அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விடுதலையானதும் தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் கணுவாய் தடுப்பணைக்கு வந்தனர். அங்கு தடுப்பணை பள்ளத்தில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story