அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்க கவர்னர் ஒப்புதல் தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - முதல் அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை


அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்க கவர்னர் ஒப்புதல் தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் -  முதல் அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Jan 2019 5:30 AM IST (Updated: 13 Jan 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்க கவர்னர் ஒப்புதல் தராவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எச்சரித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்க கோப்புகளை தயார் செய்து, அமைச்சரும், நானும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பினோம். நவம்பர் மாதத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குத் தான் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்க முடியும் என்று கூறி அதை திருப்பி அனுப்பினார்.

ஆனால் பொங்கல் பரிசு என்பது அரசின் திட்டம். ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அரசின் இலவச பொருட்கள் என்று கூறி கவர்னர் அனுப்பிய கோப்பை ஏற்காமல் அதனை மீண்டும் திருப்பி அனுப்பினோம்.

கவர்னருக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கோப்பின் மீது கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல் அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விதிகளை சுட்டிக்காட்டி அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறி அதற்கு அனுமதி தரும்படி கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம்.

இதற்கிடையே தமிழக அரசு அந்த மாநில மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்கியது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் அனைவருக்கும் ரூ.1000 கொடுப்பதற்கு மட்டும் தடை விதித்தது. இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கவர்னர் நாங்கள் அனுப்பிய கோப்பை மீண்டும் திருப்பி அனுப்பி விட்டார்.

தமிழகத்தில் பொங்கல் பொருட்கள் வழங்க தடை விதிக்கவில்லை. அனைத்து ரே‌ஷன்கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்க மட்டுமே கோர்ட்டு தடை விதித்தது. தற்போது இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் சர்க்கரை வழங்கும் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கலாம் என்று மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் சர்க்கரை வழங்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்பதே கோர்ட்டின் தீர்ப்பு.

ஆனால் கிரண்பெடி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று தன்னிச்சையாக எடுத்த முடிவை எதிர்த்தும், ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி கோப்பை மீண்டும் அனுப்பியுள்ளேன்.

கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறவராக இருந்தால் உடனடியாக வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி மக்களின் விரோதி என்று மக்கள் முடிவு செய்வார்கள்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு தனி அதிகாரம் இல்லை. அரசு நடவடிக்கைகளில் அவர் நேரடியாக தலையிட முடியாது, அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிடவோ, அவர்களை மிரட்டவோ உரிமையில்லை என்று நான் பலமுறை கடிதம் எழுதியும் அவர் தன்னை திருத்தி கொள்ளவில்லை. தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில் இறங்கி திட்டங்களை முடக்கும் வேலையை செய்து வருகிறார்.

கவர்னர் கிரண்பெடி ஒவ்வொரு துறையாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டுகிறார். சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதிகாரிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார். அவர் கவர்னர் பதவிக்கு தகுதியில்லாதவர். நிர்வாகம் தெரியாதவர். மக்கள் மீது அக்கறையில்லாதவர். மாநில வளர்ச்சியை பற்றி நினைப்பதில்லை. திட்டங்களை முடக்குவதில் மட்டுமே முனைப்பாக செயல்படுபவர்.

ஏற்கனவே புதுவையில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என்று நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதனை நிரூபிக்கும் வகையில் கவர்னருடன் 5 அதிகாரிகள் சேர்ந்து பேட்டி தருகிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய செயல். ஆலோசகராக உள்ள ஓய்வுபெற்ற அதிகாரி எப்படி கவர்னருடன் அமர்ந்து பேட்டி கொடுக்க முடியும்? இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம். அதிகாரிகளை வசைபாடுவதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தரம் தாழ்ந்து, பதவிக்கு தகுதியில்லாதவராக செயல்பட்டு வருகின்றார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு முட்டுக் கட்டையாக உள்ளது.

மில், கூட்டுறவு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அதனை நிறைவேற்ற கவர்னரிடம் கோப்பை அனுப்பினால் சம்பளத்தை கொடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.

அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசை தடுத்து நிறுத்தினால் அதற்கான விளைவுகளை கவர்னர் கிரண்பெடி சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் சம்பள தொகையை நிறுத்தினாலும் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்தால் அதை அவர் கண்டு கொள்வதில்லை. இது துரதிர்ஷ்டமானது.

கிரண்பெடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வரும். மக்கள் கொதித்தெழுந்தால் இருக்கும் இடம் இல்லாமல் போய்விடுவார். புதுவை மக்களை தவறாக எடைபோட வேண்டாம். உரிமைகளை தடுத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘புதுச்சேரி அரசால் விதிக்கப்பட்ட வீட்டு வரியால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். எனவே இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்து வீட்டு வரியில் 25 சதவீதம் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் அடிப்படையில் 1,723 குடும்பங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்வதற்காக ரூ.2½ கோடியை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு அரசு வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.


Next Story