பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதுவை நேரு வீதியில் கழிவுநீர் குப்பைகளால் போக்குவரத்து நெரிசல்
புதுவையின் முக்கிய கடைவீதியான நேரு வீதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு மண் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.
புதுச்சேரி,
புதுவை நேரு வீதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. முக்கிய கடை வீதியாக விளங்கும் இந்த வீதி உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களின் வருகையால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இங்கு வருபவர்களின் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்படுவதாலும் பொதுமக்களின் நடமாட்டத்தாலும் போக்குவரத்து நெருக்கடி என்பது பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது.
இதை சமாளிக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே நேரு வீதியில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இதுதவிர 6 மாதத்துக்கு ஒருமுறை ‘பார்க்கிங்’ யும் போக்குவரத்து போலீசாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது ஜனவரி 1–ந் தேதி முதல் ஜூன் 30–ந் தேதி வரை ஒருபுறமும், ஜூலை 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி வரை எதிர்புறமும் பார்க்கிங் முறை அமலில் உள்ளது. ஆனாலும் நேரு வீதியில் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை.
இந்த நிலையில் நேரு வீதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது. துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி மண் உள்ளிட்ட கழிவுகளை சாலையோரங்களில் ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். தற்போது இதுவும் சேர்ந்து கொண்டதால் காலை, மாலை நேரங்களில் நேரு வீதி இடியாப்ப சிக்கலாக இருந்து வருகிறது.
மேலும் கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகள் அந்த வீதி முழுவதும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தபடி செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரு வீதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.