மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதஞ்சையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை + "||" + Pongal festivalIn the Tanjore, jasmine kilo Sale to 3 thousand rupees

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதஞ்சையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதஞ்சையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. கடும் பனிப்பொழிவால் விளைச்சலும் வெகுவாக குறைவாக உள்ளது.
தஞ்சாவூர்,

தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 52-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. தினமும் 4 அல்லது 5 மினி லாரிகளில் பூக்கள் விற்பனைக்கு வரும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு, பாபநாசம், உத்தமநல்லூர் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வரும்
தஞ்சை மார்க்கெட்டில் இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இடங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தஞ்சை வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். சில மொத்த வியாபாரிகளுக்கு இங்கிருந்து பூக்கள் சாக்குகளில் அனுப்பி வைக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தற்போது பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பூக்களின் விலையோ கடுமையாக உயர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்பட்ட விலையை விட நேற்று பூக்களின் விலை உச்சத்தை தொட்டது.
தஞ்சையில் நேற்று 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்துக்கும், அதற்கு முன்னர் ரூ.1000-த்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் விளைச்சலும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இதன் விலை அதிகரித்தது.

இதேபோல் ஜாதி மல்லி, முல்லைப்பூ விலையும் நேற்று முன்தினத்தை விட நேற்று கடுமையாக உயர்ந்தது காணப்பட்டது. ஜாதிமல்லி நேற்று கிலோ ரூ.1,500-க்கும், முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. விலை உயர்ந்தாலும் விற்பனை அதிகமாக காணப்பட்டது.
நேற்று தஞ்சை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை(1 கிலோ) வருமாறு:-

மல்லிகை ரூ.3,000, ஜாதிமல்லி ரூ.1,500, முல்லை ரூ.2,000, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.150, செண்டிப்பூ ரூ.80, மருக்கொழுந்து கட்டு ரூ.100, ரோஜா ரூ.150.

இது குறித்து பூ மொத்த வியாபாரி சந்திரசேகர் கூறுகையில், “பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக எப்போதும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரம் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை. யாராவது வேண்டும் என்று கேட்டால் மட்டும் வரவழைத்து கொடுக்கிறோம். அதுவும் 1 கிலோ என்ற அளவுக்கு மட்டுமே வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகைக்காக மற்ற பூக்களின் விலை அதிகமாக இருப்பதால் செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை