ராமேசுவரம் கோவிலில் 30 தீர்த்தங்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு; கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்


ராமேசுவரம் கோவிலில் 30 தீர்த்தங்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு; கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:49 PM GMT (Updated: 12 Jan 2019 10:49 PM GMT)

ராமேசுவரத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய 30 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அவற்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பக்தர்களுக்கு நேற்று அர்ப்பணித்தார்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் ராமாயண இதிகாசத்துடன் மிகுந்த தொடர்புடையது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி ராமேசுவரத்தில் 108 புனித தீர்த்தங்கள் இருப்பதாகவும், இந்த தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. இந்த தீர்த்தங்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமலும், பக்தர்களின் கவனத்தை ஈர்க்காததாலும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன.

இந்த நிலையில் பசுமை ராமேசுவரம், விவேகானந்தா கேந்திரம் ஆகியவை சார்பில் இப்பகுதியில் இருந்த மங்கள தீர்த்தம், நகுல தீர்த்தம், பீமன் தீர்த்தம், அர்ச்சுனன் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், ருணவிபோசன தீர்த்தம், கபி தீர்த்தம், சர்வரோக நிவாரண தீர்த்தம் உள்ளிட்ட 30 தீர்த்தங்கள் கண்டறியப்பட்டு அவை புனரமைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த புண்ணிய தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக தங்கச்சிமடம் அருகே அமைந்துள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. இதில் புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்கள் மற்றும் கோடி தீர்த்தம் ஆகியவற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜையில் 108 குடும்பத்தினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தீர்த்தங்களை அர்ப்பணித்தார்.

முன்னதாக நடந்த யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மங்கள தீர்த்த குளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனிதநீரை மங்கள தீர்த்தக்குளத்தில் ஊற்றினார். இதேபோல பூஜையில் கலந்து கொண்ட 108 குடும்பத்தினரும் புனித நீரை குளத்தில் ஊற்றினர். அதனை தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் பசுமை ராமேசுவரம் விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே மகாவீர் தர்மசாலாவில் உள்ள பசுமை ராமேசுவரம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அன்னை சாரதா தேவி அமர்ந்திருந்த அறையில் சிறிது நேரம் தியானம் செய்தார். பின்பு கோசுவாமி மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவேகானந்தர் 155-வது பிறந்த நாள் விழா மற்றும் புண்ணிய தீர்த்தங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொண்டார். அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்த விழாவில் தீர்த்தங்களின் மகிமை குறித்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் வந்தால் தான் அந்த யாத்திரை முழுமையடையும் என்று நம்பப்படுகிறது. பத்ரிநாத், பூரி, துவாரகா போன்ற முக்கிய தலங்களை போல ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் முக்கியமானது. இங்குள்ள லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதேபோல இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் உரையாற்றிய விவேகானந்தர் நாடு திரும்பியதும் முதலில் காலடி எடுத்து வைத்த பூமியும் ராமேசுவரம் தான். மேலும் இதற்கு ஒரு சிறப்பு உள்ளது. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த மண்ணும் ராமேசுவரம் என்பது தான். சிறந்த எண்ணங்களே வாழ்க்கையை சிறப்பாக வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

Next Story