உசிலம்பட்டி அருகே பயங்கரம்: பொங்கல் பரிசு பணத்தை தர மறுத்த மனைவி கொலை


உசிலம்பட்டி அருகே பயங்கரம்: பொங்கல் பரிசு பணத்தை தர மறுத்த மனைவி கொலை
x
தினத்தந்தி 12 Jan 2019 11:30 PM GMT (Updated: 12 Jan 2019 10:50 PM GMT)

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பணத்தை தர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர் போலீசில் சரண் அடைந்தார்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70). இவரது மனைவி ராசம்மாள் என்கிற ராசாத்தி (65). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். விவசாயியான ராமர் முதுமையின் காரணமாக விவசாயம் செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். ராசாத்தி கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்று மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் வேலைக்கு போக முடியாத நிலையில் இருந்த ராமர் அருகிலுள்ளவர்களிடம் கடன் வாங்கி சாப்பாடு செய்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அரசு வழங்கும் ரூ.1000 பொங்கல் பரிசை வாங்க ராசாத்தி ஊருக்கு வந்துள்ளார். ரேஷன் கடையில் பொங்கல் பரிசாக வழங்கிய ரூ.1000-ஐ வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏற்கனவே சாப்பாட்டிற்காக அருகில் உள்ளவர்களிடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்றும், எனவே பொங்கல் பரிசில் பாதி தொகையான ரூ.500-ஐ தர வேண்டும் என்றும் ராமர் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராசாத்தி கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் ராசாத்தி தூங்கிக்கொண்டிருந்தார். மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த ராமர் அதிகாலை 4 மணியளவில் எழுந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராசாத்தியின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராசாத்தி பரிதாபமாக இறந்து போனார்.

மனைவியை கொலை செய்த ராமர் நேராக எழுமலை போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு சரண் அடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் முத்து கைது செய்தார். பொங்கல் பரிசு பணத்துக்காக மூதாட்டியை கணவரே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :
Next Story