விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்
விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகேயுள்ள செல்லம்பட்டி வட்டாரம், வாலாந்தூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. தேனி எம்.பி. பார்த்திபன் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:–
செல்லம்பட்டி வட்டாரத்தில் நெற்பயிர் சம்பா பருவத்திலும், இதர பயிர்கள் காரிப் பருவத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கும் மொத்த சாகுபடி பரப்பு 8565 எக்டேர். இதில் தற்பொழுது நெல் 5311 எக்டேரிலும், சோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் இதர சிறுதானியங்கள் 883 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகைகள் 545 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி 590 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, எள், தென்னை மற்றும் கரும்பு 317 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வட்டாரத்தில் விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியை இருமடங்கு அதிகரித்து மும்மடங்கு வருமானம் பெறும் நோக்கத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம், விதை கிராமத் திட்டம், கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு இடுபொருட்களுக்கு மானியம், செயல்விளக்கத்திடலுக்கு மானியம் மற்றும் பண்ணைக் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதி 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் நிதி 40 சதவீத உதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் விரிவாக்க சீர்திருத்தத் திட்டமானது நிலையான நீடித்த வளம் குன்றா வேளாண் உற்பத்திக்கும், விவசாயப் பெருமக்களின் நிகர வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த நிதி ஆண்டிற்கு ரூ.15லட்சத்து66 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2265 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள். தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கூறினார்.
வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குமாரவடிவேல், உசிலம்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாலன், ஒன்றிய பேரவை மணிவண்ணன் உள்பட பலர் கல்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் சென்று உள்நோயாளிகள், வெளிநோயாளிகளின் சிகிச்சை குறித்தும், சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர் உசிலம்பட்டி நுகர்வோர் வாணிபகிட்டங்கியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல், பயறுவகைகளின் மூடைகளை பார்வையிட்டு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்.