டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ்ராஜா, "அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டாக்டர்களின் கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி எப்போது தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும், அந்த அறிக்கையின் அடிப்படையில் டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் டாக்டர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை விவரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முடிவில், டாக்டர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உறுதியான முடிவு எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை வருகிற 28–ந்தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.