அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக கழிவறை அமைக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக கழிவறை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையம் 8 பிளாட்பாரங்கள் கொண்ட பெரிய ரெயில் நிலையமாகும். இங்கு தினமும் பல எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள் வந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், வடமாநிலங்களுக்கு சென்று வருகிறது. தற்போது அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 1–வது, 2–வது பிளாட்பாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் எதிரில் 2, 3–வது பிளாட்பாரங்களுக்கு இடையே கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் கட்டண விவரங்கள் எதுவும் இல்லை. எனவே அங்கு வரும் பயணிகளிடம் ஆளுக்கு தகுந்தார் போல் அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கட்டண விவரங்களை நுழைவுவாயிலில் நிரந்தரமாக எழுதி வைக்க ரெயில்வே வணிக மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் விரிவாக்கப்பட்டு உள்ளதால் 1, 1ஏ ஆகிய பிளாட்பாரங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள் வந்து நிற்கிறது. நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து வரும் பயணிகள் ரெயில் நிலையத்தில் இறங்கியவுடன் கழிவறை செல்ல வேண்டுமென்றால் 20 நிமிடம் நடந்து சென்று, பிளாட்பாரங்களை கடந்து 3–வது பிளாட்பாரத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 1, 1ஏ பிளாட்பாரங்களில் கழிவறைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.