கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கூறினார்.
வேலூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வேலூர் தொரப்பாடியில் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் ஏ.ஐ.டி.யு.சி.யின் 19–வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 4½ ஆண்டுகளில் தொழிலாளர்களின் நலசட்டங்கள், உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை கொள்ளையடிக்கவே அங்கு பணிபுரிந்த காவலாளி, கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், இதற்காக கேரளாவில் இருந்து ஆட்களை வரவழைத்து சதித்திட்டம் தீட்டி ரூ.5 கோடிக்கு பேரம் பேசியதாகவும், இதில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டியது முதல்–அமைச்சரின் கடமையாகும்.
கோடநாடு விவகாரத்தில் முதல்–அமைச்சர் மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கிறது. இதற்காக அவர் பதவியில் இருந்து விலகி உண்மையை நிரூபிக்க வேண்டும். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பதாக தற்போது அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஜெயலலிதா சாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சந்தேகம் இருந்திருந்தால் அவர் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஜெயலலிதா இறந்தவுடன் முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அவர் முதல்–அமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் முதல்–அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவின் சாவில் சந்தேகம் என்று அவரின் நினைவிடத்துக்கு சென்று தியானம் செய்கிறார்.
ஜெயலலிதா விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்றும் அவரின் சாவிற்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து, அதனை தடுத்து நிறுத்த வேண்டும். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை மிகவும் குறைவாகும்.
வாட்டாள் நாகராஜ் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். இதன் மூலம் இருமாநில மக்களிடையே இனரீதியாக மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இதனை அங்குள்ள கட்சிகள் கண்டிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சாமிகண்ணு, தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.