கும்மிடிப்பூண்டி அருகே குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கும்மிடிப்பூண்டி அருகே குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 5:03 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த கண்ணங்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கும், கிருஷ்ணா கால்வாய்க்கும் இடையே கால்வாய் அமைக்கும் பணிக்காக அருகே உள்ள கரடிப்புத்தூர் கிராமத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்கு குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் வரை மண் வெட்டி எடுக்கப்பட்டது. அவ்வாறு கால்வாய் பணிக்காக வெட்டி எடுக்கப்பட்ட மண், தற்போது மேற்கண்ட கால்வாயின் ஓரமாக குவியலாக குவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட மண்ணை அந்த இடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையாக அரசு சார்பில் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கரடிப்புத்தூர் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மேற்கண்ட கால்வாய் அருகே உள்ள பகுதியில் குவிக்கப்பட்டிருந்த மண்ணை அள்ள லாரிகள் அங்கு வந்தன. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், இந்த நீர்த்தேக்க திட்டம் இதுவரை முழுமை பெறாத நிலையில், மிகவும் ஆழமாக வெட்டப்பட்ட கால்வாய்க்கு, தற்போது உள்ள மண் குவியலே மிக வலுவான தடுப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் குவாரி அமைத்து மண் அகற்றப்பட்டால், கால்நடைகளும் கிராம பொதுமக்களும் மேற்கண்ட கால்வாய்க்குள் தவறி விழ நேரிடும் என்றும் அதே நேரத்தில் நீர்தேக்க திட்டம் நிறைவேறாமல் போனால் கிராமத்தின் குறுக்கே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தான கால்வாய் பள்ளம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் வலியுறுத்தினர்.

எனவே வெட்டப்பட்ட கால்வாய் மண்ணை எடுத்து அதே பகுதியில் கால்வாயை பலப்படுத்திட வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். கிராம மக்களின் முற்றுகை போராட்டத்தை கண்டு அங்கு மண் எடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த வழியே திரும்பிச்சென்றன. மேலும் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

Next Story