திண்டுக்கல்லில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி


திண்டுக்கல்லில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 5:25 PM GMT)

திண்டுக்கல்லில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் கங்கா. இவர், தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் 2 ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஏ.டி.எம். மையங்களுக்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், எதையோ உடைப்பது போன்று சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டதும் கங்கா கண் விழித்து எழுந்தார்.

பின்னர் சத்தம் வந்த திசையை கூர்ந்து கவனித்த போது, வீட்டின் கீழ் தளத்தில் இருந்து சத்தம் வருவது தெரியவந்தது. கீழ் தளத்தில் ஏ.டி.எம். மையங்கள் இருப்பதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், தனது கணவரை எழுப்பி விவரத்தை கூறினார். மேலும் தொடர்ந்து சத்தம் கேட்டபடி இருந்தது.

உடனே அவர்கள் மாடியில் இருந்தபடியே சத்தம் போட்டனர். இதைத் தொடர்ந்து திடீரென சத்தம் கேட்பது நின்றது. சில வினாடிகளில் ஏ.டி.எம். மையத்தின் அருகே நின்ற மோட்டார்சைக்கிளில் ஏறி 2 பேர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர். இதனால் ஏதோ விபரீதம் நடந்ததை கங்கா அறிந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 2 ஏ.டி.எம். மையங்களிலும் இருந்த எந்திரங்களின் கீழ் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், எந்திரத்துக்குள் பணம் இருந்த பெட்டியை உடைக்கவில்லை.

எனவே, மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க நினைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. மேலும் பணம் இருக்கும் பெட்டியை திறக்க முடியாததால், அதை உடைக்க முயன்ற போது கங்கா சத்தம் போட்டதால், மர்ம நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. இந்தநிலையில் ஏ.டி.எம். மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story