தேவதானப்பட்டி அருகே, காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்களை கண்காணிக்க கேமராக்கள்
கொடைக்கானல் செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தேனி,
கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிக்கடி அடையாளம் தெரியாத பிணங்கள் மீட்கப்பட்டு வந்தன. பல்வேறு இடங்களில் கொலை செய்து விட்டு பிணத்தை இந்த மலைப்பாதையில் தூக்கி வீசிச் செல்லும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தன. அவ்வாறு மீட்கப்படும் பிணங்களை அடையாளம் காணவும், துப்புத்துலங்கவும் போலீசார் பெரிதும் சிரமங்களை சந்திக்க வேண்டியது இருந்தது.
இதையடுத்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸ் துறை இணைந்து கொடைக்கானல் மலைப்பாதையில் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இதன்பிறகு குற்றச்சம்பவங்கள் குறைந்து உள்ளன.
இருப்பினும் இந்த மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களை கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையில் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு எனும் இடத்தில் கொடைக்கானல் சாலை சந்திப்பு பகுதியில் புதிதாக 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அங்கு புதிதாக 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம் கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்-குமுளி சாலையில் செல்லும் வாகனங்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story