ராசிபுரத்தில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி 845 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


ராசிபுரத்தில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி 845 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 9:45 PM GMT (Updated: 13 Jan 2019 7:27 PM GMT)

ராசிபுரத்தில் மாநில அளவில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 845 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் சார்பில் 2-வது மாநில அளவிலான வெற்றி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 845 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ராசிபுரம்-ஆத்தூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து போட்டிகள் தொடங்கி பள்ளியில் முடிவடைந்தன.

இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் குணசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டும் நாட்டம் செலுத்துவதோடு இல்லாமல் உடலையும் மனதையும் பலப்படுத்தும் மாரத்தான் போன்ற விளையாட்டுக்களிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என்றார்.

ஆண்கள் பிரிவில் ராசிபுரம் அருகேயுள்ள கீரனூர் வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் கே.வி.அணிஸ் முதலிடம் பெற்றார். இந்த மாணவனுக்கு முதல் பரிசு ரூ.4,999-க்கான காசோலையும், குருசாமிபாளையம் வித்யாமந்திர் பள்ளி மாணவன் கவுதமிற்கு 2-ம் பரிசாக ரூ.2,999-க்கான காசோலையும், பெண்கள் பிரிவில் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காவியாவுக்கு முதல் பரிசாக ரூ.4,999-க்கான காசோலையும், அதே பள்ளியைச் சேர்ந்த ஜீவிதாவுக்கு 2-ம் பரிசாக ரூ.2,999-க்கான காசோலையும் வழங்கப்பட்டது. விழாவில் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் வெற்றிச்செல்வன், தாளாளர் விஜய், செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் சிற்றரசன், பொருளாளர் பழனிவேல், இயக்குனர்கள் மாரிமுத்து, சந்திரசேகரன், தாசபிரகாசம், ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கெட்சி மெட்டில்டா நன்றி கூறினார்.

Next Story