விழுப்புரத்தில் 1,549 பேருக்கு ரூ.5½ கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


விழுப்புரத்தில் 1,549 பேருக்கு ரூ.5½ கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 8:17 PM GMT)

விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பில் 1,549 பேருக்கு ரூ.5.58 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் ராஜேந்திரன், ஆரணி செஞ்சி ஏழுமலை, சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பட்டதாரி பெண்கள் 683 பேருக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்கள் 866 பேர் என ஆக மொத்தம் 1,549 பேருக்கு ரூ.5 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழைகளுக்கு பசுமை வீடுகள், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவேன் என்று கூறினார். அதன்படி தற்போதைய அரசு நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தபோதிலும் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஜெயலலிதாவைபோல் தற்போதைய அரசும் பெண்களுக்கு திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கத்தை வழங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு முத்தமிழ்செல்வன், ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜி.ஜி.சுரேஷ்பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், செந்தில், கோல்டு சேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் பேருராட்சி தலைவர் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story