தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாத்து தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்ப்போம் -அமைச்சர் நமச்சிவாயம் பொங்கல் வாழ்த்து


தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாத்து தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்ப்போம் -அமைச்சர் நமச்சிவாயம் பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 9:16 PM GMT)

தமிழர்களின் பாரம்பரியத்தை கலாசாரத்தை பாதுகாத்து தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்ப்போம் என அமைச்சர் நமச்சிவாயம் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழர்களின் கலாசாரங்களையும், அவர்களின் வீரதீர செயல்களையும் அனைவரும் அறியும் வண்ணம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை போற்றுதலுக்குரிய பண்டிகையாகும்.

மக்கள் பசிபோக்கும் விவசாயிகள் அவர்களுக்கு உதவும் கால்நடைகளின் தளாராத உழைப்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒப்பற்ற திருநாள் பொங்கல் திருநாளாகும். உறவுகளுடன் பாசத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி எல்லோரும் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழ்வோம். உலக பொதுமறையாம் திருக்குறளை தந்து தமிழன்னைக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர் பிறந்தநாளும் பொங்கல் திருநாளில் வருவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

மகிழ்ச்சி பொங்க கொண்டாடும் இந்த பொங்கல் திருநாளில் தமிழர்களின் பாரம்பரியத்தை கலாசாரத்தை காத்து தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்ப்போம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:–

கருணாநிதியால் பெருமைப்படுத்தி கொண்டாடுகின்ற இந்த தை முதல் நாள்தான் தமிழர்களுடைய வருடத்தின் முதல்நாள் என்று பறைசாற்றப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் நாம் அனைவரும் இயற்கையை வணங்கி, விவசாய பெருமக்களும், விவசாயம் சார்ந்த தொழிலும் இயற்கையின் இடரின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டுவோம். விவசாயிகள் மற்றும் வேறு தொழில் செய்பவர்கள் என அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வரலாற்று நிகழ்வுகளில் நாமும் கலந்துகொண்டு மகிழ்கின்ற இந்த பொங்கல் திருநாள் சிறந்த நாளாகவும், ஏற்றமிகு நாளாகவும் அமையவேண்டும்.

அதே நேரத்தில் தமிழரின் பெருமையை, கலாசாரத்தை மறைத்து மத்தியில் ஆளுகின்ற தமிழர் விரோத பாரதீய ஜனதா அரசை அகற்றுகின்ற திருநாளாக இந்த ஆண்டு அமைவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் சூளுரைத்து விவசாயிகளுக்கு ஏற்றமிகு ஆண்டாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் ஆண்டாக அவர்களை நாட்டின் நிலைத்தூணாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், இயற்கையின் அருளால், உழவர் பெருமக்களின் கடின உழைப்பால் விளைந்த நெற்கதிர்கள், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் போன்ற விளைபொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, நம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் திருநாள் பொங்கல். அறுவடை திருநாளாம் பொங்கல் திருநாளில் புதுச்சேரி மக்களின் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இவ்வேளையில் சாதி மற்றும் மதங்களை கடந்து நமது பாரத மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் அனைத்து சலுகைகளையும் பெற்று புதிய பாரம் படைத்திட வேண்டுமென அயராது உழைத்துக்கொண்டிருக்கும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story