ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி: குடியரசு தினத்தன்று உண்ணாவிரதம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி: குடியரசு தினத்தன்று உண்ணாவிரதம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 9:27 PM GMT)

திருவாரூர் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரதம் நடத்தப்போவதாக பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது–

காவிரியின் குறுக்கே கர்நாடகம் இனி அணை கட்டி தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் கூறி உள்ளது. கீழ்பாசனத்தை தடுக்கக்கூடாது என நிரந்தரமான சட்டமும் உள்ள நிலையில் மேகதாதுவில் அணை கட்ட விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இது சட்ட விரோதமானது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்குத்தான் அனுமதி கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசு கூறுவது மோசடி நடவடிக்கையாகும். இதனை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆதாரத்தோடு எடுத்துக்கூறி ஆய்விற்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள்நாகராஜ், விவசாயிகள் சங்க தலைவர் என்ற போர்வையில் அணை கட்டுவதை தமிழகம் தடுத்தால் கன்னடத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இனி ஒரு தமிழனுக்கு சிறு பாதிப்பு என்றாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அவர் மீது தேச துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுத்து கன்னட தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26–ந்தேதி(சனிக்கிழமை) குடியரசு தினத்தன்று தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட தலைவர் துரை.பாஸ்கரன், கவுரவ தலைவர் திருப்பதிவாண்டையார், மாவட்ட செயலாளர் மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story