சாமி விவேகானந்தரின் கருத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் துணைவேந்தர் பேச்சு


சாமி விவேகானந்தரின் கருத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:54 PM GMT (Updated: 13 Jan 2019 10:54 PM GMT)

சாமி விவேகானந்தரின் கருத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினம், சாமி விவேகானந்தரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:– சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வ செயல்களைச் செய்யும் மனிதர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையிலும், உலக அமைதியை ஏற்படுத்துவது தான் கல்வியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று சாமி விவேகானந்தர் கூறினார்.

இந்த கருத்தை நினைவில் வைத்தும், உலகில் அமைதியை ஏற்படுத்தவும் இளைஞர்கள் அயராது உழைக்க வேண்டும். இளைஞர்களின் ஆற்றலில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர் சாமி விவேகானந்தர். இளைஞர்களால் எதையும் செய்ய முடியும் என்றும் நாட்டை உயர்நிலைக்கு அவர்களால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தே அவர்களுக்கு எண்ணற்ற அறிவுரைகளைக் கூறியுள்ளார். அறிவியலையும், ஆன்மிகத்தையும் இரு கண்களாக நாம் கருத வேண்டும் என்று சாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.

மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அவருடைய கருத்தை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். எனவே இளைஞர்கள் சாமி விவேகானந்தரின் கருத்தை பின்பற்றி தாங்களும் வளர்ந்து, நாட்டையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மதுரை சாமி விவேகானந்தா சேவா ஆசிரமத்தின் தலைவர் சாமி சதாசிவானந்த மகராஜ் பேசும்போது, ஒவ்வொரு இளைஞரும் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், சீரிய சிந்தனைகள், இவற்றோடு ஆக்கப்பூர்வ உழைப்பையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற விவேகானந்தரின் எண்ணத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலக அமைதி இன்றைய இளைஞர்களின் கையில் தான் உள்ளது.

அனைத்து மதங்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் போதிக்கின்றன இதை வலியுறுத்தி தான் சாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு அமைந்து இருந்தது. அவரின் சிந்தனைகளை செயலில் காட்டி நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்று செயல்படுவோம் என்றார். முன்னதாக சாமி விவோகனந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் வசிமலைராஜா நன்றி கூறினார்.


Next Story