புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மழைக்காலத்துக்கு பின்பு தொடங்கும் அதிகாரி தகவல்


புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மழைக்காலத்துக்கு பின்பு தொடங்கும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2019 12:10 AM GMT (Updated: 14 Jan 2019 12:10 AM GMT)

மும்பையில் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மழைக்காலத்துக்கு பின் தொடங்கும் என என்.எச்.எஸ்.ஆர்.சி.அதிகாரி கூறினார்.

மும்பை,

நாட்டிலேயே முதன் முறையாக புல்லட் ரெயில் திட்டம் மராட்டிய மாநில தலைநகர் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே 508 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் (என்.எச்.எஸ்.ஆர்.சி.) மேற்கொள்கிறது.

தற்போது இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை கடந்த டிசம்பரிலேயே முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மராட்டியத்தில் 108 கிராமங்கள் வழியாக செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு அதிகளவில் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. இதற்கு தானே மற்றும் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக புல்லட் ரெயில் திட்டப்பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி குஜராத்தில் முதல் கட்டப்பணிகள் தொடங்க உள்ளது.

இதில் ஆமதாபாத் முதல் பிலிமோரோ வரை புல்லட் வழித்தடம் மற்றும் புல்லட் ரெயில் நிலையங்களை அமைக்க திட்டமிட்டு இருக்கிறது. அதன் பின்னர் பிலிமோரோ - மும்பை இடையே 2-ம் கட்டமாக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மும்பையில் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மழைக்காலத்திற்கு பின்னர் தொடங்கும் என தேசிய அதிவேக ரெயில் கழகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பாந்திரா - குர்லா காம்ப்ளக்சில் அமையும் புல்லட் ரெயில் முனையத்துக்கான வடிவ அமைப்பு ஒப்புதலுக்காக தயார் செய்யப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் கோரப்படும்.

இதையடுத்து, மும்பை, தானே, பால்கரில் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் மழைக்காலத்துக்கு பின்னர் தொடங்கப்படும்’’ என்றார்.

Next Story