சூளைமேட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ‘திடீர்’ தீ விபத்து 5 பெண்கள் மயக்கம்


சூளைமேட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ‘திடீர்’ தீ விபத்து 5 பெண்கள் மயக்கம்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:00 AM IST (Updated: 14 Jan 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 5 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை சூளைமேடு திருவள்ளுவர் தெருவில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 28 பெண்கள் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். 2 மாடி கொண்ட இந்த விடுதியில் நேற்று திடீரென அதிக அளவில் புகை உண்டானது.

இந்த புகை திடீரென தீயாகமாறி பற்றி எறிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ அந்த விடுதியின் முதல் தளத்தில் அதிகளவில் பரவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வேப்பேரி தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின்போது விடுதியில் இருந்த 5 பெண்களை மீட்க முயன்ற பாதுகாவலர் மகேஷ் (வயது 45) என்பவர் காயமடைந்தார். உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த தீ விபத்து குறித்து நிலைய அதிகாரி விஜயகுமார் கூறுகையில், “விடுதியின் தரைத்தளத்தில் இருந்த மின் பெட்டியில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்க முடியும். தீ விபத்தின்போது எழுந்த புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பெண்கள் மயக்கம் அடைந்தனர். உரிய சிகிச்சைக்கு பிறகு அவர்கள் நல மடைந்தனர்”, என்றார்.

இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story