பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:30 PM GMT (Updated: 14 Jan 2019 6:19 PM GMT)

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சி மடம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு போய் விட்டது.

இதனால் ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் காலிக்குடங்களுடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலிக்குடங்களுடன் அதே பகுதியில் உள்ள பென்னாகரம்-ஏரியூர் செல்லும் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பிரசன்னமூர்த்தி மற்றும் பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story