கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக வியாபாரி புகார்


கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக வியாபாரி புகார்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:45 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக வியாபாரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கோவை,

கோவை போத்தனூர், செட்டிப்பாளையம் ரோட்டை சேர்ந்த டி.நிக்சன் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் துணை கமிஷனர் பெருமாளை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் குடிசை தொழிலாக மிட்டாய் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு முன்பு நான் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கினேன். அப்போது வெற்று பேப்பரிலும், வெற்று காசோலையிலும் கையெழுத்து வாங்கினார். என்னால் குறிப்பிட்ட நேரத்தில் பணம் செலுத்த முடியாததால் 40 நாளில் வட்டியுடன் சேர்த்து ரூ.93 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக அவர் கூறினார்.

பின்னர் நான் கடன் வாங்கிய நபரே முன்வந்து மேலும் ரூ.7 ஆயிரம் கடனாக கொடுத்து ரூ.1 லட்சமாக்கினார். இப்படியாக ரூ.1½ லட்சம்வரை நான் அந்த நபரிடம் வாங்கினேன். அப்போதுதான் கந்துவட்டி ஆசாமியிடம் சிக்கிவிட்டேன் என்று எனக்கு தெரிந்தது. தொடர்ந்து பணம் கேட்டு கும்பலுடன் வந்து மிரட்டியதால் மனைவி நகைகளை விற்றும், மற்றவர்களிடம் கடன் வாங்கியும் இதுவரை ரூ.6 லட்சம்வரை கொடுத்தேன்.

இந்தநிலையில் இன்னும் வட்டியும், முதலும் சரியாக செலுத்தவில்லை என்று கூறி மிரட்டி என்னுடைய வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் எடுத்துச்சென்றனர். மேலும் ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். இதனால் தற்கொலை முயற்சி செய்தேன். என் நண்பர் என்னை காப்பாற்றினார். தொடர்ந்து கந்துவட்டி கும்பலால் மிரட்டப்பட்டு வருகிறேன். இதனால் நான் செய்துவந்த தொழிலையும் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கும், எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதுடன், என்னிடம் கூடுதலாக வசூலித்த பணத்தையும், பொருட்களையும் மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story