தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி


தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2019 4:15 AM IST (Updated: 15 Jan 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கிளீனருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே 27 கொண்டைஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது. இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் மற்றும் பழுது காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மக்காச்சோள பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை சிறுமுகையை சேர்ந்த மகேந்திரன் (வயது 48) என்பவர் ஓட்டினார். கிளீனராக ராஜேந்திரன் (44) என்பவர் இருந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திம்பம் மலைப்பாதையில் உள்ள 25–வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரிக்குள் சிக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு டிரைவர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்தபோது லாரியில் இருந்து வெளியே குதித்து கிளீனர் ராஜேந்திரன் உயிர்தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.


Next Story