இலங்கை கடற்படை அத்துமீறிய தாக்குதலில் பலியான ராமேசுவரம் மீனவர் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரியிடம், மகள் மனு


இலங்கை கடற்படை அத்துமீறிய தாக்குதலில் பலியான ராமேசுவரம் மீனவர் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரியிடம், மகள் மனு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:45 AM IST (Updated: 15 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலால் பலியான மீனவரின் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அவருடைய மகள், மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12–ந் தேதி சுமார் 600–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக குட்டி கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த ரைமண்டு என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர். மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த கருப்பையா என்பவரது படகின் மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதியதாகவும், அதில் அந்த படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவருகிறது.

இதையடுத்து அந்த படகில் இருந்த மீனவர் முனியசாமி உள்ளிட்டோர் கடலுக்குள் விழுந்தனர். இதில் கடலில் தத்தளித்த முனியசாமி பலியானதாக கூறப்படுகிறது. உடனே முனியசாமியின் உடலையும், மேலும் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய தாக்குதலால் பலியான முனியசாமியின் உடல் தற்போது யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முனியசாமியின் மகள் சண்முகப்பிரியா இதுகுறித்து ராமேசுவரத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்துள்ளார். அதில், தனது தந்தை முனியசாமியின் உடல் இலங்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் முனியசாமி இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய முயற்சி எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.


Next Story