உச்சிப்புளி அருகே ஊருணிக்குள் விழுந்து சிறுவன் பலி
உச்சிப்புளி அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஊருணிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது பனவாய்க்கூட்டம் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் சமயமுத்து, டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 6) ஆக்கிடாவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் சந்தோஷ் விளையாட சென்றுள்ளான்.
அகஸ்தியர் கூட்டம் சாலை அருகே உள்ள ஊருணி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை திடீரென காணவில்லை. இரவு நேரமாகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர்கள் அருகில் உள்ள வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியாததால் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனிடையே சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஊருணியில் தேடிப்பார்த்த போது தடுப்புச்சுவர் அருகே அவனது உடல் ஒதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதைப்பார்த்து சிறுவனின் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஆழம் குறைவாக இருந்த இந்த ஊருணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தூர்வாரப்பட்டது. 10 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்டது. ஆனால் ஊருணிக்கு தடுப்புச்சுவர் கட்டப்படாததால் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. இதனால் தான் தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஊருணிக்கு உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றனர்.