அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்


அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:35 PM GMT)

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நெல் அறுவடை பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல்வேறு பகுதிகளில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாகையை அடுத்த பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து, நெல் கொள்முதல் நிலையம் முன்பு சாலையில் நெல்லை கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், தெத்தி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கவில்லை.

இதனால் அறுவடை செய்த நெல்லை வைத்து கொண்டு விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.


Next Story