கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்: மாணங்கொண்டான் ஆற்றில் மதகுகள் பழுது நீக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
மாணங்கொண்டான் ஆற்றில் உள்ள மதகுகள் பழுதடைந்து கடலில் தண்ணீர் வீணாக கலக்கிறது. மதகுகளை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதி, காவிரி ஆற்றின் கடைமடை பாசன பகுதியாகும். மேட்டூர் அணை நிரம்பினால் மட்டுமே இங்கு உள்ள காவிரி ஆற்றின் கிளை ஆறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த ஆண்டு (2018) மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால், அங்கிருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வந்தது.
இதன் காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கடைமடை பாசன ஆறுகளுக்கும் தண்ணீர் கிடைத்தது. வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டில் இருந்து ஆதனூர் வரை உள்ள ஏராளமான கிராமங்களின் விவசாய பாசனத்துக்கு பயன்பட்டு வரும் முக்கிய ஆறாக மாணங்கொண்டான் ஆறு திகழ்கிறது.
மாணங்கொண்டான் ஆற்றில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்காக ஆதனூர் ஊராட்சி காவில்தாவு கிராமத்தில் 10 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்த மதகுகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பித்தனர்.
முன்னதாக இந்த ஆற்றை ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் தூர்வாரும் பணியும் நடந்தது. இந்த நிலையில் கோவில்தாவு மாணங்கொண்டான் ஆற்றில் உள்ள மதகுகள் தற்போது பழுதடைந்து காணப்படுகின்றன. அதன் வழியாக தண்ணீர் வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது. மதகுகளை உடனடியாக பழுது நீக்கி, தண்ணீரை தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–
வேதாரண்யம் தாலுகா பகுதியில் முக்கிய பாசன ஆறாக உள்ள மானங்கொண்டான் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது. மாணங்கொண்டான் ஆற்றின் தண்ணீர் தேக்கி வைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட 6 மாதங்களிலேயே மதகுகள் பழுதடைந்து உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
இல்லை என்றால் வெகு விரைவில் ஆற்று தண்ணீர் முழுவதும் வீணாகி, வரும் மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.